This article is an extract from an article that appeared in recent Thuglak magazine. The author is Murugan, Retired I.A.S; he writes about a first hand (or a second hand) account of how the voters and election staff and other officials are paid money during the Thirumangalam bye election
தமிழ் நாட்டில் அரசியல் நடவடிக்கைகளும், ஆட்சி முறையும் தியாகம், தூய்மை, நேர்மை, பொது நன்மை எனும் சீரிய அடிப்படைகளில் இருந்து விலகி விட்டன. சுயநலம், ஊழல், பணம் சேர்த்து செட்டிலாகி விடுவது, சட்டத்தை வளைத்து எந்தக் காரியத்தையும் செய்து விட முடியும் என்ற நிலைக்கு இவை தள்ளப்பட்டு விட்டன. இதைச் சமீபகாலத் தேர்தல் முடிவுகளும், அதையொட்டிய அரசியல் நிகழ்ச்சிகளும் உறுதிப்படுத்துகின்றன. அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் நடந்துகொள்ளும் விதமும் இதையே நிரூபிக்கின்றன.
பணம் தண்ணீராகச் செலவு செய்யப்பட்டு, இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. வெற்றி பெற்றதை, மற்ற கட்சியினரும், அரசியல் நோக்கர்களும் கவனிக்க ஆரம்பித்தது, திருமங்கலம் இடைத்தேர்தலில்தான். அங்கே, இடைத்தேர்தல் வேலை முனிசிபாலிடி மற்றும் பஞ்சாயத்து வார்டுகள் சகிதம் கட்சிக்காரர்களுக்கு கனகச்சிதமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு அமைச்சர் அல்லது மாவட்டச் செயலாளர் தலைமையேற்றனர். 100 வாக்காளர்களைக் கவனிக்கும் பொறுப்பு, ஒரு கட்சித் தொண்டர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வேலையில் கலந்து கொண்ட பலரும், அங்கே நடந்த விஷயங்களை ஒளிவுமறைவு இல்லாமல் பேசி வருகிறார்கள்.
எப்படித் தேர்தலில் பணம் விளையாடியது என்பதை என்னிடம் விவரித்தார் ஒரு ஆளும் கட்சித் தலைவர். திருமங்கலத்தில் ஒரு வார்டு கமிட்டியின் உறுப்பினர் இரண்டுபுறமும் வீடுகள் உள்ள நீளமான குறுகிய ஒரு தெருவில் ஒரு முனையில் ஆரம்பித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, ஒரு ஓட்டிற்கு 500 ரூபாய் என்ற கணக்கில் குடும்பத்தாரிடம் வழங்கி, தங்கள் வாக்காளருக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்வார்களாம். இவ்வேலையைச் செய்வதற்கு முன்னரே வாக்காளர் பட்டியலை வைத்து, லோக்கல் கட்சியினர் தெருவில் உள்ள கட்சிக்காரர்கள் மூலமாக, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஓட்டர்களின் எண்ணிக்கை விவரங்களைச் சரிபார்த்து, பணத்தைக் கவர்களில் வைத்துத் தயார் செய்துள்ளனர்.
இதுபோல், வாக்காளர்களைச் சந்தித்துப் பணம் கொடுக்க ஆளும் கட்சியினர் வருவார்கள் எனும் தகவல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, அவர்களை எதிர்பார்த்து ஒவ்வொரு வீட்டிலும் ஓட்டர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். ஒரு தெருவில் இதுபோல் பணம் பட்டுவாடா சுமூகமான முறையில் நடந்து கொண்டிருக்கையில், ஆளும் கட்சியின் குழுவில் இருந்த அந்த வார்டு கௌன்ஸிலர் மற்ற தலைவர்களிடம் தயக்கத்துடன் தூரத்தில் இருந்த ஒரு வீட்டை சுட்டிக்காட்டி, அந்த வீடு அ.தி.மு.க.வின் லோக்கல் தலைவர் ஒருவரின் வீடு எனவும், அவர்தான் தன்னை எதிர்த்து அந்த வார்டு எலெக்ஷனில் போட்டியிட்டுத் தோற்றவர் எனவும் கூறியுள்ளார்.
அந்த வீட்டின் முகப்புச் சுவரில் இரட்டைஇலை சின்னம் சிமென்டில் அமைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து எல்லோரும் தயங்கியுள்ளனர். வார்டு பிரச்சாரத்தில், மற்ற ஊர்களில் இருந்து வந்த தி.மு.க. உறுப்பினர்களும் உண்டு என்பதால், எப்படி அந்த வீட்டிற்கு அருகிலும், அந்த வீட்டிலும் பணத்தைப் பட்டுவாடா செய்வது என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது.
போதாக்குறைக்கு அந்த வீட்டின் சொந்தக்காரரான, அ.தி.மு.க. வேட்பாளராக கௌன்சிலர் எலெக்ஷனில் போட்டியிட்டவர், வீட்டின் முன் குடும்பத்தாருடன் நின்று கொண்டு தி.மு.க.வின் ‘பிரச்சாரத்தை’க் கவனித்துக் கொண்டிருந்தார்.
நிலைமையைச் சமாளிக்க, அவரது வீட்டிற்குப் போக வேண்டியதில்லை என்ற முடிவை ஆளும் கட்சியின் பிரச்சாரக் குழு எடுத்திருக்கிறது. ஆனால், அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று கவர் கொடுத்து விட்டு வந்து பார்த்தபோது, அ.தி.மு.க. புள்ளி அவர் வீட்டின் வாசலில் இல்லை. அவரது மனைவி ஆளும் கட்சியினரைப் பார்த்து, ‘எங்கள் வீட்டிற்கு வருவீர்களா இல்லையா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டிருக்கிறார். இவர்கள் தயங்கிக் கொண்டே முன்னேறி, ‘நீங்கள் எதிர்க் கட்சியைச் சார்ந்த குடும்பம். எங்களிடம் கவர் வாங்குவீர்களா?’ என்று ஒருவர் கேட்க, ‘எல்லோரையும் போல நாங்களும் பெற்றுக் கொள்வோம்’ என்று அந்த அம்மையார் கூறியுள்ளார்.
எல்லோருமே ஆச்சரியப்பட, வெளி மாவட்டத்திலிருந்து வந்த தி.மு.க. தலைவர் அந்த வீட்டிற்கான கவருடன் உள்ளே நுழைந்து, அ.தி.மு.க. புள்ளியின் மனைவியிடம் கவரைக் கொடுத்திருக்கிறார். ‘எங்களுக்கு ஓட்டுப் போடுவீர்களா?’ என்று கேட்டவரிடம், ‘நாங்கள் மிகவும் நாணயமானவர்கள். கைநீட்டி பணம் வாங்கிய பின் நிச்சயம் மாற மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார் அப்பெண்மணி.
இதைப் போலவே மிகவும் கண்ணியமான வியாபாரம், அரசு வேலை, தனியார் கம்பெனிகளில் வேலை... என்றிருந்த பலரிடமும் பேசிப் பார்த்ததில், பெருவாரியான மக்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களித்தது தெரிய வந்தது.
இதுபோக அரசு அலுவலர்கள், போலீஸார், மற்றும் கீழ்மட்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் தங்கள் முழு ஒத்துழைப்பையும் ஆளும் கட்சிக்குக் கொடுத்திருக்கிறார்கள். நடுநிலைமை வகிக்க வேண்டும், நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று யாராவது ஒரு தேர்தல் அதிகாரி விரும்பினால், அவர் தவறு செய்யாமல் ஒதுங்கிக் கொள்ளலாமே தவிர, தடுத்து நிறுத்திக் கேள்வி கேட்டிருக்க முடியாது என்ற சூழ்நிலையே அங்கு நிலவியதாகப் பலரும் கூறுகிறார்கள்.
பத்திரிகையில் வந்த செய்திகளின்படி, பல தேர்தல் ஊழியர்கள், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், தேர்தல் விதிமுறைகளின்படி ஓட்டர்களின் கையெழுத்து மற்றும் எந்த அடையாள அட்டையைக் காட்டி ஓட்டளித்தார்கள் என்பதை ஃபார்ம் 17-ஏ எனும் படிவத்தில் பூர்த்தி செய்யவில்லை. அதாவது தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் மிகவும் தெளிவாகச் சொல்லியபடி, ஓட்டர் லிஸ்ட்டில் பெயர் இருக்கும் ஒருவர், ‘எபிக்’ எனப்படும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். அல்லது அனுமதிக்கப்பட்ட அடையாளம் காட்டும் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு போன்ற ஏதேனும் ஒரு தாக்கீதைச் சமர்ப்பித்தால்தான் ஓட்டளிக்க முடியும். எவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள தாக்கீதுகள் எனும் லிஸ்ட்டில் ரேஷன் கார்டுகள் கிடையாது. காரணம், நிறைய போலி ரேஷன் கார்டுகள் உலவுகின்றன.
ஆனால், கள்ள ஓட்டுப் போடுவதற்கு ரேஷன் கார்டுகளை ஐ.டி.யாக உபயோகித்தால், அவர்களின் கையெழுத்தை ஃபார்ம் 17-ஏ-வில் பெறாமல்தான் செய்ய முடியும். எனவே, இதுபோல் நிறைய ஓட்டுச் சாவடிகளில் நடக்கக் காரணமாயிருந்தவர்கள் யார் என்று விசாரிக்கப்பட்டதாம். பகுதி அதிகாரிகள், ஜோனல் ஆஃபீஸர்ஸ் என 10 முதல் 15 பூத்துகளுக்கு ஒருவர், தேர்தல் நேரத்தில் நியமிக்கப்பட்டு, தேர்தல் நாளன்று ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் சரியான விதிமுறைகளின்படி எல்லாம் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரம் உடையவர்கள்தான் இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் கீழ் வேலை செய்யும் துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள். ஓட்டுச் சாவடியின் அதிகாரிகளிடம், ரேஷன் கார்டை வைத்து கொண்டு ஓட்டளிக்க அனுமதிக்கலாம் என்று இவர்கள் உத்திரவிட்டதாகப் புகார்கள் வந்தன.
மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, திருமங்கலம் இடைத்தேர்தல் முடிந்தவுடன், 17-ஏ படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத ஓட்டு சாவடிகளுக்கு பொறுப்பான பகுதி அதிகாரிகளுக்கு, குற்றச்சாட்டு குறிப்பாணை ஏற்படுத்தி, நடவடிக்கை தொடர கலெக்டருக்கு உத்திரவிட்டார். அதன்படி நடவடிக்கைக்கு உள்ளான வருவாய்த்துறை துணை தாசில்தார்களுக்காக மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். எல்லா தேர்தல் பகுதி அதிகாரிகளும் ஒரே மாதிரி பதிலை அளித்து, தொழிலாளர் சங்கம்போல் ஒற்றுமையாக இவ்விஷயத்தை எதிர்ப்போம் என்ற வகையில் நடந்துள்ளார்கள். காரணம், இவை எல்லாவற்றிற்கும் ஆளும் கட்சியின் ஆதரவு உண்டு என்று அரசு அதிகாரிகள் நினைப்பதுதான்.
இதைவிட வருந்தத்தக்க அம்சம், ஓட்டுச் சாவடியில் வேலையில் இருந்த அரசு ஊழியர்கள் பலரும் பணம் வாங்கிக் கொண்டார்கள் எனும் பரவலான குற்றச்சாட்டு. ஆளும் கட்சிக்கும், அரசு ஊழியர்களுக்கும் எதிராகத் தேர்தலை கண்காணிக்க எதிர்க் கட்சியினர் ஓட்டுச் சாவடிக்கு அனுப்பும் கட்சியின் தேர்தல் ஏஜென்ட்கள் பலர் பணம் பெற்றுக் கொண்டு, கள்ள ஓட்டுக்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
இதுபோல் கீழ்நிலை அரசு ஊழியர்கள், மாற்றுக் கட்சியின் ஏஜென்ட்கள், வாக்காளர்கள் ஆகிய முத்தரப்பினரையும் பண மழையில் குளிக்க வைத்த பின்னரும், மற்ற கட்சிகளில் தீவிரம் காட்டுபவர்களுக்கு, ஆளும் கட்சியின் அடியாட்கள் பிரச்சனைகளை உருவாக்கியது பரவலாகத் தெரிந்தது.
எந்த ஒரு புகார் எதிர்க் கட்சியினரிடமிருந்து வந்தாலும் போலீஸார் அதை உதாசீனப்படுத்தியும், ஆளும் கட்சி தரப்பில் வரும் புகார்களை உடனுக்குடன் கவனித்து நடவடிக்கை எடுப்பதும் சர்வ சாதாரணமாகியது.
ஆக, தமிழகத்தைப் பொறுத்தவரையில், முதன் முதலாக ஒரு புது அரசியல் நடைமுறையை தென் தமிழ்நாட்டு தி.மு.க.வின் மதுரை தலைவர் உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தி, தேர்தலில் எப்படியும் ஜெயித்துவிட முடியும் என்பதை நிரூபித்துள்ளார். அதன் அடிப்படையில் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிந்தபின், தமிழ்நாட்டில் நடந்த மேலும் ஐந்து இடைத்தேர்தல்களிலும், இதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசியல் ஒரு இக்கட்டான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் கேலிக்குரியதாகியுள்ளது. இதுபோன்ற ஒரு நிலைமை உருவாக காரணம் என்ன என்ற ஆய்வை அரசியல், ஜனநாயகம், நல்லாட்சி, மக்களின் சுபீட்சம் இவை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அறிஞர்களும், அரசியல் மற்றும் சமூக நோக்கர்களும் விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
தமிழகத்தின் அரசியல் மற்றும் பொதுவாழ்வு என்பது நேர்மை, தொண்டு போன்ற அம்சங்களை விட்டு விலகி, சுயநலம், ஊழல் என்று தடம் புரண்டு பயணிக்க ஆரம்பித்தது 1967-க்குப் பின்னர்தான். திராவிடக் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஊழல், நேர்மையற்ற ஆட்சி என்ற புதிய உருவத்தை எடுக்கும். ஆரம்பகாலங்களில், இன்றைய ஊழல் ஆட்சியின் சிகரமாக இருக்கும் கட்சிகள், தலைவர்களுக்கு, பொதுமக்கள் தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டு தேர்தலில் தோற்கடித்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. அது நடக்கவும் செய்தது. உதாரணமாக எம்.ஜி.ஆர். 1977-ஆம் ஆண்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வை எதிர்கொண்டு வெற்றி அடைந்ததும், ஜெயலலிதாவை 1996-ல் கருணாநிதி தோற்கடித்ததும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே.
அதுமட்டுமன்றி, தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து, தங்கள் கருத்துக்களை, தைரியமான முறையில் எடுத்துரைத்து, பல நேரங்களில் தவறான நடவடிக்கைக்கு உடன்பட மாட்டேன் என எதிர்ப்புத் தெரிவிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அந்தக் காலங்களில் உண்டு. மக்கள் பெரிய அளவில் நியாயத்தையும் நேர்மையையும் விரும்பியது, காலம் செல்லச் செல்லக் குறைந்து விட்டது. பொதுவாழ்வில் நுழைந்த பலர் தவறுகள் செய்து, ஊழலில் திளைத்து, பணம் சம்பாதித்து சொகுசான வாழ்க்கையை எல்லோர் முன்னிலையிலும் கூச்சமின்றி அமைத்துக் கொள்வதைக் கண்டு, நாமும் இதுபோல் செட்டிலாக மாட்டோமா என்று சாதாரண ஜனங்களும் நினைக்கும் காலகட்டத்திற்கு நாம் வந்து விட்டோம். ஒரு அரசியல் கட்சியின் மாநிலப் பதவியில் இருந்தபோது, என்னால் இதை நேரடியாகக் காண முடிந்தது